இன்று உலகம் முழுவதும் கோவிட் வைரஸ் காய்ச்சல்-நோய் பரவிக்கொண்டு இருக்கிறது. இதற்கு பல இலட்சக் கணக்கான மக்கள் பலியாவார்கள் என்கிற அச்சம் எல்லாரிடத்திலும் பரவியுள்ளது. முதல் பார்வைக்கு, கொள்ளை நோய்கள் ஊகிக்க முடியாததாகவும், மனித இனத்திற்கு இயற்கையால் வழங்கப்பட்ட தண்டனை போலவும் இருப்பதாக பலர் கருதலாம். அதேபோல் கோவிட்-19 கொள்ளை நோயும் அப்படிப்பட்ட இயற்கை பேரிடர் என்று கருதலாம். ஆனால், கொள்ளை நோய்களை உண்டாக்கும் கிருமிகளின் தோற்றங்களும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளும் பொருந்தும்போதுதான் அந்த கொள்ளை நோய்களே உருவாகின்றன என்பதை ஆழமான ஆய்வு நமக்கு தெரிவிக்கும். பொதுவாக தற்காலத்திய முதலாளித்துவ உற்பத்திமுறையிலும் குறிப்பாக உலக முதலாளித்துவ நெருக்கடியிலும் தற்போது ஏற்பட்டுள்ள கோவிட்-19 என்னும் உலகளாவிய கொள்ளை நோய்க்கான காரணத்தை நாம் கண்டுகொள்ள முடியும்.
இன்றைய சூழலில், பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் கலாச்சாரம் என்று அனைத்தும் தழுவிய நெருக்கடியில், ஓரு கட்டமைப்பு நெருக்கடியில் முதலாளித்துவம் சிக்குண்டுள்ளது. முதலாளித்துவத்தின் இந்த கட்டமைப்பு நெருக்கடியை கோவிட்-19 மேலும் தீவிரப்படுத்தியுள்ளது, தீவிரப்படுத்தும். இப்போது இந்த கோவிட்-19 நோயின் பரவலை தடுக்க’ உலகின் பல அரசுகள் ஊரடங்கு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளன. ஏற்கனவே, நெருக்கடியின் விளிம்பை தொட்டுவிட்ட பொருளாதாரம் இதனால் இருண்ட ஆழமான சுழலில் விழும் என்று முதலாளித்துவ அறிவுஜீவிகள் கூறுகின்றனர். ஆனால், தீர்வே காணமுடியாத பொருளாதார நெருக்கடிக்கு மட்டுமல்ல, இக்கொள்ளை நோய்க்கும் காரணம் முதலாளித்துவ இலாப வெறிதான் என்பதை வசதியாக பேச மறுக்கின்றனர். பொதுவாக, இப்படிப்பட்ட கொள்ளை நோய்கள் உருவாவது முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயக்கத்தில் எப்படி உள்ளார்ந்து இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள இக்கட்டுரை பயன்படும் என்று கருதுகிறோம்.
கோவிட்-19-ஐ புரிந்துகொள்ள சில அறிவியல் பார்வைகள்
கோவிட்-19 என்பது அதிதீவிர சுவாச பிரச்சினையை உண்டாக்கும் கரோனாவைரஸ்-2 (Severe Acute Respiratory Syndrome Coronovirus 2, SARS-CoV-2) என்னும் வைரஸ் கிருமியால் உண்டாகும் நோயாகும். இந்த கரோனாவைரஸ் 1960களில் கண்டறியப்பட்டது. இது பல நோய்குறிகளை உண்டாக்கும்; சிலரிடம் சாதாரண சளி, காய்ச்சல் மட்டும் வெளிப்படும்; மற்ற சிலருக்கு தீவிரமான சுவாச பிரச்சினை, நுரையீரல் தொற்று போன்றவை உண்டாகி மரணம் வரை இட்டு செல்லலாம். 2012-ல் தோன்றிய மெர்ஸ்-கரோனா வைரசும் (Middle East Respiratory Syndrome Coronovirus, MERS-CoV) தொற்று உறுதி செய்யப்பட்ட மூன்றில் ஒரு பங்கு மக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்தது. கோவிட்-19 மற்ற நோய்க்குறிகளுடன், காய்ச்சலையும் வரட்டு இருமலையும் தோற்றுவிக்கிறது. இது நிமோனியாவை உண்டாக்கி குறிப்பாக வயதானவர்களையும், ஏற்கனவே உடல்நலப்பிரச்சினை உள்ளவர்களையும் கொல்லும் ஆபத்தான வைரஸ் தொற்றாக இருக்கிறது. (இந்த நோய்த் தொற்று ஏற்பட்டவர்களின் இறப்புவிகிதம் கிட்டதட்ட 2-4 சதவிகிதமாக இருக்கிறது. இதுவே பருவகால ஃபுளுக்காய்ச்சலின் இறப்புவிகிதமோ 0.1 சதவிகிதம் தான்.) இந்த கரோனாவைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இருமல், தும்மல் மூலமாக பரவுகிறது.
உயிரணுவியல்ரீதியாக பார்த்தால் இந்த கரோனாவைரஸ் வேகமாக உடன்-மாற்றமடையக் (Mutation) கூடிய ஒற்றை-இழை ஆர்.என்.ஏ (Single Strand RNA) வைரஸாகும். “மனிதயினத்தின் மரபணு ஒரு சதவீதம் பரிணாமமடைய 80 லட்சம் வருடங்கள் எடுத்துக்கொள்ளும். விலங்குகளுக்கு இருக்கும் பல ஆர்.என்.ஏ வைரஸ்கள் ஒரு சதவீதம் பரிணாம மாற்றமைடய சில நாட்களே எடுத்துக்கொள்கின்றன.”1 மற்ற பல வைரஸ்களை போலவே, கரோனாவைரஸுக்கும் விலங்கினங்கள் தான் வாழ்கலனாக (reservoirs) இருக்கின்றன. இந்த வைரஸ்கள் பரிணாம வளர்ச்சி (through antigenic shift) மூலம் விலங்கினத்திருந்து மனிதயினத்துக்கு பரவும் நிகழ்ச்சிபோக்கு சூனாசிஸ் (Zoonosis) எனப்படுகிறது. பிறகு, மேலும் பரிணாமம் வளர்ச்சியடைந்து மனிதர்-மனிதர் தொற்றாகவும் உருவாகலாம். இப்படி நடக்கும் போதுதான் கொள்ளை நோய்களோ (Epidemics), உலகளாவிய கொள்ளை நோய்களோ (Pandemics) உண்டாகின்றன. பரிணாமமடைந்த இந்த வைரஸ்களுக்கு எதிராக குறிப்பான நோயெதிர்ப்பு அணுக்கள் மனிதர்களுக்கு இருக்காது என்பதால், வேகமாக பரவி பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
ஃபுளுக்காய்ச்சல் (Influenza) ஒரு சிறந்த உதாரணம். கரோனாவைரஸ் போலவே, ஃபுளுக்காய்ச்சல் வைரஸ்களும் ஒற்றை-இழை ஆர்.என்.ஏ வைரஸ்கள் தான். இந்த வைரஸ்களின் வாழ்கலனாக நீர்வாழ் பறவையினங்களான வாத்து, மணிவாத்து, போன்றவை இருக்கின்றன. இந்த பறவையினங்களில் ஃபுளுக்காய்ச்சல் வைரஸ்கள் சாதாரண நோய்குறிகளையே உண்டாக்குகின்றன, உதாரணமாக இவைகளிடம் செரிமான பிரச்சினை உண்டாகி வைரஸ் தொற்று உள்ள பறவைகளின் கழிவுகளில் இருந்து வைரஸ் வெளிவரும். இவற்றுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பு ஏற்படும்போது, மனிதர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டு மூச்சுக்குழாய் சுவாசப் பிரச்சினைகளை உண்டாகின்றன. இப்படி, ஃபுளுக்காய்ச்சல் வைரஸ்கள் பல உடன்-மாற்றம் மூலம் பறவையினங்களின் எல்லையைத் தாண்டி மனிதர்களையும் வாழ்கலனாக கொண்டு வாழும் வகையில் வைரஸ்கள் பரிணாம மாற்றமடைகின்றன2. இது அரிதாகவே நடக்கின்றன என்றாலும் நடக்கிறது.
பொதுவாக, மனிதர்களை வாழ்கலனாக கொள்ளும் வகையில் வைரஸ்கள் உடன்-மாற்றமடைவது இன்னொரு இடைப்பட்ட (intermediate host) விலங்கினம் மூலமாகவே, உதாரணமாக பன்றிகள் மூலமாக, நடக்கிறது. ஏனென்றால், பன்றிகளின் உயிரணுக்கள் பறவைகளை தொற்றும் வைரஸ்கள் மற்றும் மனிதர்களை தொற்றும் வைரஸ்கள் ஆகிய இரண்டினாலும் பாதிப்படையும் வகையில் உள்ளது3. ஆக, இந்த இரண்டு உயிரினங்களையும் கடந்து வருவதன் மூலமாக அது மனிதர்களைத் தொற்றும் புதிய வைரஸ்களாக வடிவம் எடுக்கின்றன. கறாராக சொன்னால், இப்படிப்பட்ட உடன்-மாற்றம் மூலம் சூனாசிஸ் மாற்றம் நடப்பதற்கு அந்த வைரஸ் பல முறை பறவை - இடைப்பட்ட விலங்கினம் - மனிதன் என்கிற சுழற்சியில் மீண்டும் மீண்டும் போய் வருவதன் மூலமே ஏற்பட முடியும். அதாவது, இந்த சுழற்சியில் பல உடன்-மாற்றங்கள் மூலமாக பரிணாமம் அடைந்து மனிதர்களை வாழ்கலனாக கொள்ளும் வைரஸ்களாக மாற்றம் அடைகின்றன. இப்படி நடைபெறும் நிகழ்ச்சிப்போக்கைதான் மேலே கூறியுள்ளபடி சூனாசிஸ் என்று பரிணாம உயிரியல் குறிப்பிடுகிறது.
பருவகால ஃபுளுக்காய்ச்சல் (Seasonal Influenza) கிட்டதட்ட 5 லட்சம் மக்களை வருடந்தோறும் கொல்வதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், மேற்கூறியவாறு வடிவமெடுக்கும் புதிய வைரஸ்கள் உலகளாவிய கொள்ளை நோயை (Pandemic Influenza) உண்டாக்க வல்லது. கரோனா வைரஸ்கள் பறவையினங்களிலும் இருக்கின்றன. குறிப்பாக, மனிதர்களுக்கு பரவும் கரோனாவைரஸ் வௌவாலை வாழ்கலனாக கொண்டது. வௌவாலிடம் இருந்து மற்ற விலங்கினங்களான பன்றி, புனுகுப்பூனை, ஒட்டகம் ஆகியவற்றுக்கு தாவுவதன் மூலமாக மனிதர்களுக்கு பரவும்தன்மையை இந்த கரோனாவைரஸ்கள் பெறுகின்றன. இந்த சூனாசிஸ் மாற்றம் என்னும் வைரஸ்-உயிரியல் நிகழ்ச்சிபோக்கு கரோனாவைரஸ் பரவலை புரிந்துகொள்ள அறிவியல்ரீதியாக முக்கிய பங்காற்றுகிறது. நவீனகால உலகில் கரோனாவைரஸ் போன்ற கொள்ளைநோய்களுக்கு காரணம் வரலாற்றுரீதியானதா, அறிவியல்ரீதியானதா அல்லது சமூக-பொருளாதாரரீதியானதா அல்லது இவை எல்லாம் இணைந்ததா என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
கொள்ளைநோய்கள் பற்றி ஒரு சுருக்கமான வரலாறு
கொள்ளைநோய்கள் பற்றி ஒரு சுருக்கமான வரலாறு
ஆரம்ப கால மனித சமூகம் வேட்டை மற்றும் உணவு தேடும் சிறு குழுக்களாக இருந்தது. அப்போது சில சமயங்களில் விலங்கு மற்றும் சுற்றுசூழலில் இருந்து அச்சமூக குழுக்கள் தொற்று நோய்களை எதிர்கொண்டன. ஆனால், அச்சிறு குழுக்களில் இருந்து மற்ற குழுக்களுக்கு அந்நோய்கள் பரவ மிக குறைவான வாய்ப்புகளே இருந்தது. சில காலத்தில், அந்நோய் தொற்றுக்கு உட்பட்ட சமூக குழுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுக்கொண்டன. இந்த நிலைமை, கிட்டதட்ட 10,000 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட புதிய கற்கால புரட்சிக்கு பிறகு மாற்றமடைந்தது. புதிய கற்கால புரட்சி நிலையான இருப்பிடத்தைக் கொண்ட விவசாய சமூகத்தை படைத்தது. மக்கள்தொகை பெருகியது; அவ்விருப்பிடங்களில் மனிதக் கழிவுகளும் திரண்டு பெருகியது; காட்டு விலங்குகள் வளர்ப்புப் பிராணிகளாக மாற்றப்பட்ட பிறகு மனிதர்களுக்கும் அப்பிராணிகளுக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. இந்நிலைமைகள் வைரஸ் கிருமிகளும் மற்ற நோய் ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகளும் மனிதர்களுக்கு பரவ அதிகமான வாய்ப்புகள் ஏற்பட்டன. மேலும், வாணிபத்தின் வளர்ச்சி, போர் மற்றும் இடப்பெயர்வு மூலமாக மற்ற மக்கள் சமூகத்திற்கும் பரவ வாய்ப்புகள் ஏற்பட்டன.
இங்ஙனம் பரவிய நோய்களை “நாகரீக நோய்கள்” என்கிறார் வில்லியம் மக்நில். ஏதாவது புதிய வாணிப தொடர்புகளோ போர்களோ இம்மக்கள் சமூகத்திற்கு ஏற்பட்டால் புதிய நோய்களும் பரவ வாய்ப்பு ஏற்பட்டது. உதாரணமாக, கி.பி. 165ம் ஆண்டில் ரோம பேரரசின் ஒரு படைபிரிவு மெசப்பொட்டாமியாவில் முகாமிட்டபோது ஒரு கொள்ளை நோய் (பெரியம்மையாக இருக்கலாம் என்கிறார் மக்நீல்) பரவியது4. இது கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு நீடித்து அப்பகுதியில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மக்கள்தொகையை அழித்தது. மெடிட்டெரியன் பகுதியில் கி.பி.541-767 வரை மீண்டும் மீண்டும் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றான புபானிக் பிளேக் நோய் எலிகளை கொண்டு வந்த வணிக கப்பல்கள் மூலம் பரவ வாய்ப்பு ஏற்பட்டது5. இது சில கோடி மக்களை பலி வாங்கியது. 13ம் நூற்றாண்டில் மங்கோலிய பேரரசு கண்டடைந்த வணிக வழித்தடங்கள் மூலமாக ஸ்டெப்பி பகுதிகளுக்கு புபானிக் பிளேக் நோயை கொண்டு வந்தது. பிறகு, கேரவன் வணிக வழித்தடம் மூலமாக கிரிமியாவை 1346-ம் ஆண்டு அதே பிளேக் நோய் தாக்கி ஐரோப்பா முழுவதும் பரவியது. இதைத்தான் ஐரோப்பிய வரலாற்றில் கருப்புச் சாவு (பிளாக் டெத் - Black Death) என்று கூறப்படுகிறது. இது 1346-50 ஆண்டுகளில் மட்டும் ஐரோப்பிய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களின் இறப்புக்கு காரணமாகியது. மக்கள் தொகை அடர்த்தியின் வளர்ச்சி, மற்றும் குப்பைகள், கழிவுகள் குவிவது, மக்கள் வாழும் தெருக்களில் எலிகளின் பெருக்கம் ஆகியவை நோய் தொற்று வேகமாக பரவுவதை உறுதிபடுத்தின. ஐரோப்பாவில் 1670ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இந்த பிளேக் நோய் வெடித்தெழுந்து கொண்டிருந்தது.
பிறகு, காலனியாதிக்க காலக்கட்டத்தில் இக்கொள்ளை நோய்கள் இன்னும் தீவிரமான முகமெடுத்தன. பெரியம்மை, பொன்னுக்குவீங்கி, தட்டம்மை ஆகிய கொள்ளை நோய்கள் காலனியாதிக்க கொடுமைகளுடன் சேர்ந்துகொண்டன. கி.பி.1568-ம் ஆண்டிலிருந்து கிட்டதட்ட அரைநூற்றாண்டில் மத்திய மெக்சிகோ மக்கள் தொகையில் 90 சதவீதத்தினரை கொள்ளை நோய்கள் துடைத்தெறிந்தன. அமெரிக்க கண்டம் முழுவதும் இதே நிலைமைதான் இருந்தது. இதனால், பெரு நாட்டின் பூர்வகுடி மக்களின் எண்ணிக்கை 70 லட்சத்திலிருந்து 5 லட்சமாக குறைந்தது.
இந்த காலக்கட்டத்தில், ஐரோப்பாவில் அடிப்படையான சமூக மாற்றம் நடைபெற்றது. குறிப்பாக, 18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தோன்றிய தொழில்துறை முதலாளித்துவம் நகரமயமாக்கலை புதிய வேகத்தில் துரிதப்படுத்தியது. மோசமான, சுகாதாரமற்ற சேரிகளில் அதிக எண்ணிக்கையிலான உழைக்கும் மக்களைக் கொண்ட நகரங்கள் பரவலாக தோன்றின. வறுமை, மன அழுத்தம் மற்றும் கூட்டநெரிசலான வாழ்விடங்கள் ஆகியவை தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்பை மேலும் அதிகப்படுத்தியது. ஒரு முறை தொற்றுநோய் உண்டானால் வேகமாக பரவியது. மேலும் இந்த பெருநகரங்களுக்கு ஒரு முறை தொற்றுநோய் வந்துவிட்டால் அந்நகரங்களுடன் தொடர்புடைய வணிக வலைபின்னல்கள் அனைத்திலும் அத்தொற்றுநோய் பரவியது.
பெரியம்மை வைரஸை பொருத்தவரை, ஃபுளுக்காய்ச்சல் வைரஸ் போல சூனாசிஸ் மாற்றம் மூலம் மனிதர்களுக்கு பரவுவதில்லை. அவ்வைரஸ்களுக்கு மனிதர்கள்தான் வாழ்கலன். ஆனால், மேற்கூறியவாறு புதிய மக்கள் சமூகத்திற்கு அது கடத்தப்படும்போது பெரிய தொற்று நோயாக உருவெடுக்கிறது. காசநோய் ஒரு வகை பாக்டீரியா; சூனாசிஸ் மாற்றம் மூலம் மனிதர்களுக்கு பரவியது. குறிப்பாக, பசுமாடுகளின் பாலில் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. 1700-களின் இங்கிலாந்தில் இது ஐந்தில் ஒரு இறப்புக்கு காரணமாக இருந்தது.
19-ம் நூற்றாண்டில், நகரமயமாக்கல், வறுமை மற்றும் காலனியாதிக்கம் எல்லாம் சேர்ந்து புது அச்சுறுத்தல்களை உருவாக்கின. காலரா நோய் இந்தியாவில்தான் பல நூற்றாண்டுகளாக இருந்தது. பிரிட்டிஷ் பேரரசுடன் இந்தியா இணைக்கப்பட்ட பிறகு, மக்கள் மற்றும் உற்பத்தி பண்டங்களின் போக்குவரத்துடன் காலராவும் பரவியது. 1817-ம் ஆண்டு இந்தியாவில் உருவான இக்கொள்ளை நோய் ரஷ்யாவையும் சீனாவையும் தாக்கியது. மூன்று வருடங்களுக்கு பிறகு, பிரிட்டிஷ் படைகள் கிழக்கு மெடிட்டேரியன் பகுதிக்கு இந்நோயை கொண்டு சென்றன. 1832, 1848 மற்றும் 1866 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் ஆரம்பித்த கொள்ளை நோய்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பரவியது. இது பாதிக்கப்பட்டவர்களில் கிட்டதட்ட பாதி பேரை கொன்றது. காலரா பாக்டீரியா தண்ணீரில் பரவும் என்பதால், இந்நோய் ஏழைகள் வாழும் பகுதிகளையே வெகுவாக பாதித்தது. 19ம் நூற்றாண்டு மான்செஸ்டரில் கொள்ளைநோய்கள் பரவிய நிலைமையை ஏங்கெல்ஸ் விரிவாக பதிவு செய்துள்ளார்:
“கொள்ளை நோய் எதிர்வரும் போது, நகர முதலாளிகளை ஒர் அனைத்தும் தழுவிய பயம் பற்றிக்கொள்கிறது. ஏழைகள் வாழும் அழுக்கான குடிசைகளை அவர்கள் ஞாபகப்படுத்தி கொள்கிறனர். உறுதியாக, இந்த சேரிகள் கொள்ளைநோய்க்கான மையாக உருவாகும் என்பதையும், அந்த கோரம் எல்லா திசைகளிலும் பரவி சொத்துடைத்த வர்க்கங்களின் வீடுகளையும் வந்தடையும் என்பதையும் கண்டு நடுக்கமுறுகின்றனர்.” 6,951 மான்செஸ்டர் நகர வீடுகளில் நடத்தப்பட்ட ஒர் ஆய்வு தெரிவிப்பது குறித்து மேலும் சொல்கிறார், “2,565 வீடுகளுக்கு உடனடியாக வெள்ளையடிக்க வேண்டுயுள்ளது... 960 வீடுகள் சிதலமடைந்துவிட்டன, 939 வீடுகளில் போதுமான வடிகால் வசதி இல்லை, 1,435 வீடுகள் பூஞ்சை பிடித்துள்ளன, 452 வீடுகளில் காற்றோட்ட சூழல் இல்லை, 2,221 வீடுகளில் கழிப்பறை இல்லை.”6
1872ல் மீண்டும் இதே கொள்ளை நோய் பிரச்சினையை தனது குடியிருப்புப் பிரச்சினை கட்டுரையில் எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். முதலாளிகள் தொழிலாளர்களின் குடியிருப்பு பிரச்சினையில் ஏன் அக்கறை கொண்டுள்ளனர் என்பதை விளக்கும்போது,
“தொழிலாளர்கள் பெருந்திரளாக நெருக்கமாக வசிக்கின்ற “ஏழ்மையான வட்டாரங்கள்” என்று கூறப்படுகின்ற பகுதிகள் நம்முடைய நகரங்களில் அடிக்கடி ஏற்படுகின்ற எல்லாவிதமான கொள்ளை நோய்களும் உற்பத்தியாகின்ற இடங்களாக இருக்கின்றன என்று நவீன இயற்கை விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. காலரா, டைபஸ், நச்சுக்காய்ச்சல், அம்மை மற்றும் இதர ஆபத்தான நோய்களின் கிருமிகள் இந்த தொழிலாளிவர்க்கக் குடியிருப்புக்களின் நச்சுக் காற்றிலும் அசுத்தமான தண்ணீரிலும் பரவுகின்றன. இங்கே இக்கிருமிகள் அநேகமாக முற்றிலும் அழிவதில்லை. சாதகமான சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட உடன், அவை கொள்ளை நோய்களாக வளர்ந்து உற்பத்தியான இடங்களுக்கு அப்பால், நகரத்தில் முதலாளிகள் வசிக்கின்ற அதிக காற்றோட்டமான, ஆரோக்கியமான பகுதிகளுக்குப் பரவுகின்றன. தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் கொள்ளை நோய்கள் உற்பத்தியாவதை முதலாளி வர்க்கம் ஆபத்தில்லாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதன் விளைவுகளினால் அதற்கு ஆபத்தேற்படுகிறது. மரண தேவன் தொழிலாளர்களின் அணிகளைத் தாக்குவதைப் போலவே ஈவிரக்கமின்றி அதன் அணிகளையும் தாக்குகிறது. இந்த உண்மை விஞ்ஞானரீதியாக நிறுவப்பட்ட உடன் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதில் போட்டியிடுகின்ற மேன்மையான உணர்ச்சி பரோபகார முதலாளிகளைத் தூண்டியது… எனினும் முதலாளித்துவ சமூக அமைப்பு அகற்றப்படவேண்டிய தீமைகளை மீண்டும் மீண்டும் மறு உற்பத்திச் செய்கிறது; அதிலும் தடுக்கமுடியாத அவசியத்துடன் அதைச் செய்வதால் - இங்கிலாந்தில் கூட - அவற்றை அகற்றுதல் ஒரு காலடி அளவுகூட முன்னேற்றமடையவில்லை.”7
பல நாடுகளில், எங்கெல்ஸ் குறிப்பிடும் நிலைமைகள் இன்னும் கடந்த காலத்திற்கு உரியனவாகவில்லை. உதாரணமாக, 2018ல் ஏமனில் போரும் பஞ்சமும் ஏற்பட்ட போது காலரா பரவி கொள்ளை நோயாக உருவெடுத்தது. தமிழகத்தில் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் சமீப ஆண்டுகளில் தலையெடுத்தன. இந்தியாவில் காசநோயின் காரணமாக தினமும் கிட்டதட்ட 1000 பேர் இறக்கின்றனர்8. பொதுமைபடுத்தி பார்த்தால், துரிதமாக்கப்படும் நகரமயமாக்கல், இதனுடன் சேர்ந்து உருவாகும் தொழிலாளர் சேரிகள் ஆகிய பொது நிலைமைகள் ஆரம்ப கால தொழில்துறை கட்டத்தில் கொள்ளை நோய்கள் உருவாக காரணமாக இருந்தன. தீவிரமான கொள்ளை நோய்கள், நாட்பட்ட நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு, இவற்றுடன் பொது மருத்துவத்திற்கான நிதிகள் ஒதுக்காமை மற்றும் சுகாதாரமின்மை ஆகியவை எல்லாம் நவீன உலகத்தில் தோன்றியவைதாம்.
இப்படிப்பட்ட கொள்ளை நோய்கள் உருவாக காரணமாக இருக்கும் நிலைமைகள் சற்று மேம்பட்ட போதிலும் (வளர்ந்த நாடுகளில் இது நடந்துள்ளது, பின்தங்கிய நாடுகளில் அந்த அளவு கூட நிறைவேறவில்லை), புதிய அச்சுறுத்தல், ஃபுளு கொள்ளை நோய் (Pandemic flu) முன்னுக்கு வந்துள்ளது. ஃபுளுக்காய்ச்சலால் ஏற்படும் கொள்ளை நோய்கள் வரலாற்றில் ஏற்கனவே ஏற்பட்டுள்ளன என்றாலும், இப்போது புது ஆற்றலுடன் அவை முன்னுக்கு வந்துள்ளன. முதலாம் உலக போர் முடிவுற இருந்த சமயத்தில் ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃபுளுவை (Spanish Flu) பார்த்தாலே போதும். 1918-ம் ஆண்டு வசந்த காலத்தில் ஏற்பட்ட இக்கொள்ளைநோயின் முதல் அலையில் எண்ணிக்கையில் குறைவான இறப்புகளே ஏற்பட்டன. ஆனால், போரின் தாக்கத்தில் அது பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. இரண்டாவது அலையில், அவ்வைரஸ் மேலும் உடன்-மாற்றமடைந்து, பெரிய இழப்புகளை ஏற்படுத்தியது. உலக போர் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் போக்குவரத்தை அத்தியாவசியப்படுத்தியது. பல கோடிக்கணக்கான மக்கள் கூட்டமாக மோசமான நிலைமைகளில் வாழத் தள்ளப்பட்டனர். இந்நிலைமைகள் கொள்ளைநோய் உருவாவதற்கான அடிப்படையை உருவாக்கி கொடுத்தது. ஸ்பானிஷ் ஃபுளு மூன்றாவது அலையாகவும் 1919ல் பரவியது. இந்த மூன்று அலைகளிலும் கிட்டதட்ட 5 முதல் 10 கோடி மக்கள் இறந்தாக இப்போது கணிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை போரில் இறந்தவர்களைவிட அதிகம். எல்லா நிலைமைகளிலும் நேரடியாக ஸ்பானிஷ் ஃபுளு வைரஸால் மக்கள் இறக்கவில்லை. அது ஏற்படுத்திய உடல்நலக் குறைவு பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுத்து, நிமோனியா ஏற்பட்டே இறந்தனர்.
இக்கொள்ளை நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டது ஏழை மக்களும், காலனிய நாடுகளும்தான். இந்தியாவில் மட்டும் 150 இலட்சம் மக்கள் இறந்தனர். பசி, சுகாதாரமற்ற வீடுகள், பிரிட்டன் அரசு அதன் படைகளுக்கு உணவளிக்க உணவுதானியங்களை பறித்துச் சென்றதால் ஏற்பட்ட பஞ்சத்தில் மக்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தது என எல்லா சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகளும் இக்கொள்ளை நோயுடன் கைக்கோர்த்ததால்தான் அவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டது.
பிறகு, பல பத்தாண்டுகள் அறிவியலாளர்கள் ஃபுளு காய்ச்சலின் தன்மையையும் அது ஏன் பெரிய இழப்புகளை ஏற்படுத்துகிறது என்பதையும் ஆராய உலகளாவிய ஃபுளு கண்காணிப்பு திட்டம் (Global Influenza Surveillance Programme) ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டம் உலக சுகாதார நிறுவனம் அமைக்கப்பட்ட பிறகு அதன் பகுதியானது. 1957ல் ஆசிய ஃபுளு கொள்ளை நோய் ஏற்பட்டது; இதில் 20 லட்சம் மக்கள் இறந்தனர். 1968ல் ஹாங்காங் ஃபுளு கொள்ளை நோய் ஏற்பட்டது; இதில் 10 லட்சம் மக்கள் இறந்தனர். அதன்பிறகு, 1976ல் பன்றிக் காய்ச்சல் அமெரிக்காவில் ஏற்பட்டது.
நவீனகால கொள்ளைநோய் அச்சுறுத்தல்
நவீன உலகின் முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்று வைரஸ்களால் ஏற்படும் உலகளாவிய கொள்ளைநோயின் பரவலாகும். இத்தகையதொரு அச்சுறுத்தலைப் புரிந்து கொள்ள முதலாளித்துவ சமுதாயக் கட்டமைப்பைப் புரிந்து கொள்ள வேண்டும். சமகால வேளாண் கட்டமைப்புக்கும் நோய்க்கிருமிகளின் சூனாடிக் தாவல்களுக்கும் (Zoonotic transmission) இடையிலான உறவை ராப் வாலஸ் தனது “பெரும் பண்ணைகள் பெரும் ஃபுளுக்காய்ச்சலை உருவாக்குகிறது” எனும் புத்தகத்தில் விலாவாரியாக விளக்கியுள்ளார்.9 இதில் புதுவகையான கொள்ளைநோய்களை உருவாக்கிப் பரப்பும் வல்லமை வாய்ந்த பகாசுர பெட்ரிக்கிண்ணமாக10 (petri-dish) மீப்பெரும் வேளாண் வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன என்பதைக் குறிப்பிடுகிறார். நவீன வேளாண் வணிகத்தில் அதிக எண்ணிக்கையில் மிக நெருக்கமாக ஒரேவகையான பண்ணை விலங்குகளை (பிராய்லர் கோழி, வாத்து, வெண்பன்றி போன்றவை) ஒன்றுகுவிப்பதால் அதிக அளிவிலான நோய்த்தொற்றிற்கும் குறைவான நோயெதிர்ப்பு சக்திக்கும் காரணமாகிறது.
1990-களுக்குப் பின், உலகமயமாக்கலால் வேளாண்வணிக வளர்ச்சியும் உலகளாவிய நிகழ்ச்சிப்போக்காக மாறியுள்ளது. எடுத்துக்காட்டாக தொழிற்துறைமயமாக்கப்பட்ட கோழி மற்றும் கால்நடை உற்பத்திக்கான மாதிரியாக டைசன் ஃபுட்ஸ் எனப்படும் பன்னாட்டு நிறுவனத்தைக் கூறலாம். ஆண்டுதோறும் 220 கோடி கோழிகளைக் இறைச்சியாக்கும் இந்நிறுவனம், அதிகரித்த, செங்குத்தாக ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தி; ஒப்பந்த விவசாயிகளைச் சுரண்டுதல்; தொழிற்சங்க உரிமைகளைப் பறித்தல்; வேலைமுறையால் தொழிலாளர்கள் பரவலாக காயமடைதல்; சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் விதமாகக் கழிவுகளை வெளியேற்றுதல்; மற்றும் அரசியல் ஊழலை நிகழ்த்துவது போன்றவற்றிற்கான இலக்கணமாக திகழ்வதாக மைக் டேவிஸ் குறிப்பிடுகிறார். சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தும் டைசன் போன்ற பெருமுதலைகள், உள்ளூர் விவசாயிகளை மீப்பெரு கோழி மற்றும் பன்றி இறைச்சி பதப்படுத்தும் நிறுவனங்களுடன் தங்களை இணைத்துக் கொள்ள நிர்பந்திக்கிறது. மறுத்தால் அவ்விவசாயிகளை அழிக்கிறது. முழு விவசாய மாவட்டங்களும் கோழிப்பண்ணைகளின் களஞ்சியமாக மாற்றப்பட்டுள்ளன; விவசாயிகள் கோழிப் பராமரிப்பாளர்களை விட சற்று அதிகமான பாத்திரத்தையே ஆற்றுகிறார்கள்.11
நவீன முதலாளித்துவ உற்பத்தி முறையில் பெருவீத கோழி மற்றும் காலநடை வளர்ப்பு துறை எப்படி நுண்கிருமிகள் பரிணாமம் அடைவதற்கும் வேக பரவுவதற்கும் அடிப்படையை உருவாக்கி கொண்டுக்கின்றன என்பதை புரிந்துக்கொள்வது கேந்திரமானதாகும். இதை புரிந்துகொள்ள 1997ல் H5N1 என்ற பரிணாமமடைந்த வைரஸால் ஏற்பட்ட “பறவைக் காய்ச்சலில்” இருந்து ஆரம்பிக்கலாம். முதன்முதலில் இது ஹாங்காங் கோழி பண்ணைகளில் தோன்றியது. ஆரம்பத்தில் கோழி மந்தைகளிடையே அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை ஏற்படுத்திய பின்னர் மனிதர்களுக்கு தாவியது. ஆண்டு இறுதியில், 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அதில் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் இறந்தனர். டிசம்பர் 1997-இல், ஹாங்காங்கில் உயிருள்ள விலங்குகளை இறைச்சிக்கு விற்கும் “ஈரச் சந்தையில்” (wet market) இறைச்சிக் கோழிகள் நோய்த்தொற்றால் தாக்கப்பட்டன - மீண்டும் H5N1 வைரஸ் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டது. இக்கோழிகள் குவாங்டாங்க் எனும் பகுதியிலிருந்து ஹாங்காங்கிற்கு கொண்டுவரப்பட்டவை.
ஹாங்காங் பண்ணைகள் பலவிதமானவை. மிக அதிக அளவில் இறைச்சிக் கோழிகளை ஒன்றாக அடைத்து வைத்து வளர்க்கும் பெருவீதப் பண்ணைகள் முதல் பிற பண்ணை விலங்குகள், நீர்வாழ் பறவைகள் மற்றும் காட்டுப் பறவைகளுடன் சுதந்திரமாகச் சுற்றித்திரியும் இறைச்சிக் கோழிகளைக் கொண்ட சிறுவீதப் பண்ணைகள் வரை இங்கு காணப்படுகின்றன. சந்தை விலையின் ஏற்ற-இறக்கத்திலிருந்து பாதுகாக்க உயிருள்ள கோழிகளை அடைத்து வைக்கும் மிகப் பெரிய கிடங்குகளும் இங்குள்ளன. மிகக் குறைவாகவே ஒழுங்குபடுத்தப்பட்ட இத்தகையதொரு தொழிற்துறையில் வீட்டுவளர்ப்பு வாத்துக்கள், மணிவாத்துக்கள், பாலூட்டிகள், ஊர்வன, காட்டுயிர்கள் மற்றும் நீர்வாழ்ப்பறவைகள் ஆகியவற்றுடன் சேர்த்தே இந்த இறைச்சிக் கோழிகளும் அடைக்கப்படுகின்றன.
ஹாங்காங்கின் எல்லையாக இருக்கும் குவாங்டாங், புதிய கோழி வளர்ப்பு முறைகளுக்கான ஓர் ஆய்வகமாக இருந்தது. அதாவது இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய பத்தாண்டுகளில் அமெரிக்காவில் முன்னோடியாக இருந்த தொழில்துறை கோழி வளர்ப்பை இது பிரதிபலித்தது. இப்பண்ணைகளே “ஃபுளுக் காய்ச்சலின் பரிணாம மையமாக” (epicenter) விளங்குகின்றன. இங்கு அமெரிக்க டைசன் மாதிரியில் இரண்டு தாய் (Thai) சகோதரர்களால் (தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள்) உருவாக்கப்பட்ட சரோயன் போக்பாண்ட் வணிகப் பேரரசு சீனாவின் தொழில்துறை விவசாயத்திற்கான திருப்பமாக அமைந்தது. தொழில்துறை விவசாயத்திற்கான இத்திருப்பம் வைரஸ்களை இனப்பெருக்கம் செய்தது மட்டுமல்ல, உண்மையில் அதிக தொற்றுத்தன்மையுள்ளவற்றையும் தேர்ந்தெடுக்கும் வல்லமை வாய்ந்ததாகவும் இருந்தது.
பொதுவாக நோய்க்கிருமிகள் தங்களை இன்னொரு ஓம்புயிரிக்கு (தன்னைத் தொற்றுகின்ற கிருமியைப் பேணிப் பாதுகாக்கின்ற உயிரி - ஓம்புயிரி - host) கடத்துமுன்னே தற்போதைய ஓம்புயிரிக்கு சேதத்தை ஏற்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்ளக்கூடாது. அதாவது ஒரு நோய்க்கிருமி மற்றொரு ஓம்புயிரியை கண்டடையும் முன் தற்போதைய ஓம்புயிரியை தீவிரமாக தாக்கினால், அது தனது தொற்றுச் சங்கிலியை தானே அறுப்பது போன்றது. ஆனால் நோய்க்கிருமி தாவுவதற்கு ஏற்ற அடுத்த ஓம்புயிரி தாயாராக இருப்பதை அக்கிருமி உணர்ந்தால், அது வீரியமிக்கதாக மாற வாய்ப்புள்ளது. ஏனென்றால் அதன் ஓம்புயிரியை தீவிரமாக தாக்குவதற்கு முன்பே அது சங்கிலியின் அடுத்த தொற்றை வெற்றிகரமாக ஏற்படுத்தும். [தொழில்துறை] பண்ணைகளில் ஃபுளு வைரஸ் மீது கூடுதல் அழுத்தங்கள் உள்ளன. தொழில்துறை விலங்குகள் குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்தவுடன் அவை கொல்லப்படுகின்றன. கோழி, வாத்து அல்லது பன்றி கொல்லப்படுவதற்கு முன்பு, எந்தவொரு விலங்கிலும் வசிக்கும் இவ்வைரஸூகள் விரைவாக அவற்றின் பரவல் வரம்பை அடைய வேண்டும். பண்ணைக் கோழிகள் 65 நாட்களில் இறைச்சியாக்கப்படுவதாலும், ஒரே இடத்தில் மிக நெருக்கமாக வளர்க்கப்படுவதாலும் நோய்க்கிருமிகள் வாழ ஏதுவான ஓம்புயிரிகள் மிகக் குறுகிய காலத்தில் பெரும் அளவில் இவற்றிற்குக் கிடைப்பதால் அதன் வீரியம் துரிதமாக அதிகரித்துப் நோய்ப்பரவல் வேகமாக நடைபெறுகிறது.
பண்ணை விலங்குகள் அல்லது இறைச்சிக் கோழிகளை ஒப்பிடும்போது, ஒரு குறிப்பிட்ட சிறப்பின காட்டு விலங்குகளுக்குள்ளே கூட (உதாரணமாக, காட்டு வௌவால்களுக்கு உள்ளே கூட) வைரஸ் பரவுவது சற்றுக் கடினம். ஏனென்றால், ஒரு சிறப்பினத்திற்குள்ளே ஒர் உயிரி மற்றொரு உயிரியிடமிருந்து வேறுப்பட்டது; அதனால் அவைகளின் நோயெதிர்ப்பு தன்மையும் வேறுப்பட்டது. ஆனால், பண்ணை விலங்குகள் இறைச்சிக்காக மனிதனால் செயற்கை தேர்வு செய்யப்படுவதால் அவைகளின் மரபணுக்கள் வேறுபாடே இல்லாததாக, ஒரே மரபணு பிரதியாக எல்லா விலங்குகளும் (more or less genetically identical) கிட்டதட்ட ஆகிவிடுகின்றன. அதனால், வைரஸ்கள் எந்தவித எதிர்ப்புமின்றி பண்ணையின் எல்லா விலங்குகளுக்கும் பரவுவதற்கு ஏற்றவாறு அவற்றின் உயிரியில் அமைப்பு இருக்கிறது. மேற்குறிப்பிட்ட எல்லா அம்சங்களில் இருந்தும் நவீன பெருவீத கோழி மற்றும் கால்நடை வளர்ப்பு துறையின் உற்பத்தித்தன்மை வைரஸ் பரவுவதற்கு ஏதுவாக இருப்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
குவாங்டாங்கிற்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான பண்ணைக்கோழிகளின் விற்பனை வலைப்பின்னல் இத்தகையதொரு கொள்ளைத்தொற்று உருவாவதற்கு ஏற்ற தளமாகச் இருப்பதற்கு இன்னொரு காரணம், இப்பகுதியில் தொழிற்மயமான ஆனால் ஒழுங்குபடுத்தப்படாத பண்ணைகள் முதல் வயற்காடுகளையொட்டி வளர்க்கப்படும் புறக்கடைப்பண்ணைகள் வரை அக்கம்பக்கமாக உள்ளன. கூடவே இங்கு பண்ணைப்பறவை முதல், வளர்ப்புப் பறவை, காட்டுப்பறவை வரை எல்லாவகையான பறவையினங்களையும் ஒரே இடத்தில் குவிக்கும் ஈரச்சந்தைகளும் உள்ளன. அதாவது காட்டுபறவை அல்லது விலங்குகளிடம் இருந்து பண்ணை விலங்குகளுக்கு வைரஸ் பரவ ஏதுவான நிலைமைகள் உள்ளன.
வாத்துகளில் காணப்படும் ஃபுளு வைரஸ் இரண்டு காடை வகைகளில் தாவி பின்னர் H5N1 வைரஸாக பரிணாமமடைந்து, இறைச்சிக் கோழிகளை தொற்றியது. நோய்த்தொற்று வெடிப்பால் ஹாங்காங்கில் 20 கோடி பறவைகள் வரை இறந்தன அல்லது கொல்லப்பட்டன. குவாங்டாங்கிலிருந்து கோழிகளை இறக்குமதி செய்வதை ஹாங்காங் தடை செய்தது. சந்தைகள் மூடப்பட்டு வெவ்வேறு விலங்குகளுக்கு தனித்தனி இடங்களை ஒதுக்கும் விதமாக அவை மறுசீரமைப்பு செய்யப்பட்டன. உயிரோடுக் கூடிய வாத்து விற்பனை தடை செய்யப்பட்டது. இந்நடைமுறைகள் குறைந்த காலம் வேலைசெய்தன. ஏனென்றால் H5N1 மனித-மனிதத் தாவல் அவ்வளவாக நடத்தவில்லை. ஆரம்பத்தில் பெரும்பாலான மனிதத் தொற்று கோழிப்பண்ணை விவசாயிகளின் குழந்தைகள், பராமரிப்பாளர்கள் என யாரெல்லாம் இப்பறவைகளுடன் நெருக்கமான உறவைப் பேணினார்களோ அவர்களை மட்டுமே தாக்கியது. முதலில் இது சூனாடிக்காகத்தான் இருந்துவந்தது. இருந்தும் உலக சுகாதார நிறுவனக் கணக்குப்படி உலகெங்கும் H5N1-ஆல் பாதிக்கப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை 861 ஆகவும் இறப்பு 455 ஆகவும் இருந்தது. இதில் எகிப்து, இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஆனால், 21-ஆம் நூற்றாண்டில் மனித சமூகத்திற்கு ஏற்பட்ட முதல் கொள்ளை நோய்க்கு காரணமாக இருந்தது H5N1 அல்ல. மாறாக 2009-இல், H1N1 எனப்படும் ஃபுளு வைரஸ் (பன்றிக் காய்ச்சல்) தொற்று அமெரிக்காவைத் தாக்கியது. இவ்வைரஸ் மனித-மனிதத் தொற்று ஏற்படுத்தும் வகையில் பரிணமித்தது. இந்நோய்க்கிருமிகள் மெக்ஸிகோவின் மீப்பெரு பன்றித் தொழிற்சாலைகளிலுள்ள பன்றிக்கூடத்தில் பரவியது. அதாவது இவ்வைரஸின் மரபுக் கால்வழிக்கூறு (strain) மனிதன், பறவைகள், யுரேஷியா மற்றும் அமெரிக்கா பகுதிகளைச் சேர்ந்த இரு பன்றியினங்கள் ஆகியவற்றின் மரபணு துணுக்குகள் (gene segments) மூலம் பரிணமித்தது. (இடைக்குறிப்பாக ஒன்றை கூறுவோம்) இதிலிருந்தே உலமயமாக்கல் புதிய வைரஸ்களை உருவாக்குவதை உய்ந்துணரலாம். இப்போது கோவிட்-19 பற்றி எளிதாக “சீன வைரஸ்” என்று இனவெறி பார்வையில் முத்திரை குத்துகின்றனர். இது தவறானது எனபதைத்தான் மேற்கூறிய விளக்கம் தெரிவிக்கிறது. ஏனென்றால், பூகோளரீதியாக வேறுப்பட்ட வைரஸ்கள் ஒன்று கலப்பதற்கு நவீன முதலாளித்துவ உற்பத்திமுறை அதிக வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கிறது; எந்த நாட்டில் தோன்றினாலும் அது உலகளாவிய முதலாளித்துவத்தின் படைப்பாகவே இருப்பதை நவீன அறிவியல் நிரூபித்துள்ளது.
விஷயத்தை தொடர்வோம். பன்றிக் காய்ச்சலை உலகளாவிய கொள்ளை நோயென உடனே அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். ஆனால் இதன் வீரியம் சாதாரண பருவகால ஃபுளுக் காய்ச்சலை ஒத்ததாக இருந்தால் இறப்பு விகிதம் குறைவாக இருந்தது. பின்னர் உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் மருந்து மற்றும் தடுப்பூசி தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சம்பளப் பட்டியலில் இருப்பதால் தான் இப்படி முந்திரிக்கொட்டைத்தனமாக அறிவிப்பு வெளியிட்டதென இங்கிலாந்து மருத்துவ இதழ் குற்றஞ்சாட்டியது. இத்தகைய இலாபநோக்கம் கொண்டவர்கள் ஊடுருவியிருக்கும் உலக சுகாதார நிறுவனம் போன்ற நிறுவனத்தின் மீது பொது சமூகத்திற்கு சந்தேகமோ விரோதமோ ஏற்படுவது ஆச்சரியமானதல்ல. ஆனால் H1N1-ஓ அல்லது H5N1-ஓ, இரண்டுமே முற்றுப்பெறாத அல்லது தள்ளிவைக்கப்பட்ட பேரழிவுகளாகவே கருதப்பட வேண்டும். ஏனென்றால் H5N1 தேவையான அளவுக்கு மனித-மனிதத் தொற்றுக்கு தயாராகவில்லை, H1N1 போதுமான அளவு வீரியமிக்கதாக இல்லை.
ஆனால், இவற்றின் சமகாலத்தில் ஏற்பட்ட இரண்டு கொரோனா வைரஸ் வெடிப்புகள் பற்றியும் இதைப் போலவே இருந்தது என்று கூற முடியாது. 2003-ஆம் ஆண்டில் குவாங்டாங்கில் ஒரு கொரோனா வைரஸ் தோன்றியது. இதனால் அம்மாகாணத்தில் நிமோனியா நோய் அதிகமாக பதிவாகியது. இது SARS-இன் அறிகுறியாகும். இதனால் ஏற்பட்ட இறப்பு விகிதம் சுமார் 10 சதவிகிதம் இருந்தது. SARS-கொரோனா வைரஸ் அம்மாகாணத்தின் ஈரச்சந்தையில் விற்கப்படும் ஒருவகை புனுகுப்பூனைகளிலிருந்து (masked palm civets) தொற்றியது. SARS-கொரோனா வைரஸின் வாழ்கலனாக இருக்கும் ஒருவகை வெளவால்களுக்கும் (Chinese horseshoe bats) மனிதர்களுக்கும் இடையில் இப்பூனைகள் இடைநிலைப் பாத்திரம் (intermediate host) வகித்தன. புனுகுப்பூனைகள், வௌவால்கள், குரங்குகள், யானைகள் ஆகியவை காபி (Coffee) கொட்டைகளை நொதிக்க செய்வதற்காக பண்ணைகளில் வளர்க்கப்படுவதையும் (இந்த விலங்களுக்கு உணவுடன் சேர்த்து காப்பிக் கொட்டைகள் கொடுக்கப்படுகின்றன. அவை உண்டு செறித்தப்பின்னர் வெளியேற்றும் கழிவுகளில் இருந்து காப்பிக் கொண்டைகள் எடுக்கப்படுகின்றன. இது, இயற்கையான முறையில் நொதிக்க வைக்கும் முறை. இந்த முறையில் தயாரிக்கப்படும் காப்பிக் கொட்டைகள் மிக மிக விலை உயர்ந்தவை) நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சார்ஸ் கொரோனா-1-க்கு பின்னர் அதைவிடக் கொடூரமான மெர்ஸ் கொரோனா (MERS) 2012-இல் சவுதி அரேபியாவைத் தாக்கியது. இந்நோய்த் தாக்குதலுக்கு ஆளான 35 சதவீதத்தினரை இக்கொள்ளை நோய் கொன்றது. இது ஐரோப்பா, ஆசியா, அமெரிக்க என எல்லா இடங்களிலும் பரவியது. கிட்டத்தட்ட 2500 பேர் நோய்த்தாக்குதலுக்கு ஆளாயினர், 5 பேர் பலியானார்கள். மெர்ஸ் வைரஸ் வௌவால்களிலிருந்து மனிதருக்கு வருவதற்கு ஒட்டகங்கள் இடைநிலைப் பாத்திரம் ஆற்றியது. அரேபியாவில் ஒட்டகங்கள் ரேஸ் நடத்தவும், சுற்றிலா கண்காட்சியிலும், இறைச்சிக்காகவும் பாலுக்காகவுமே பயன்படுத்தப்படுகின்றன. இதனாலேயே ஒட்டக வளர்ப்பு நவீன அரேபியாவில் தீவரமடைந்துள்ளது. கூடவே உயிருள்ள ஒட்டகங்கள் இறக்குமதியும் செய்யப்படுகின்றன. 2013-இல் அரேபியாவில் வெட்டப்பட்ட 70% ஒட்டகங்கள் இறக்குமதி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியகிழக்கு நாடுகளுக்குள் ரேஸ் நடத்தவும், சுற்றிலா கண்காட்சிக்காகவும் எல்லைகளைத் தாண்டி ஒட்டகங்கள் நகர்கின்றன. இத்தகைய வணிக நடவடிக்கைகள் காரணமாகவே பல்வேறு இன மக்கள் வழி வைரஸின் பல்வேறுபட்ட மரபுக் கால்வழிக்கூறுகள் ஒன்றுகலந்து மெர்ஸ் கொள்ளைநோய் வெடிப்பு ஏற்பட்டது. மெர்ஸ், சார்ஸ் போன்றவை கோவிட்-19-ன் முந்தைய மரபுக் கால்வழிக்கூறுகளே.
1990-களுக்குப் பின்னர் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதோடு உலகின் பெரும்பாலான நாடுகளும் காட் ஒப்பந்தத்தில் கையெடுத்திட்டு உலக வர்த்தகநிறுவனத்தின் உறுப்பினர்களாயினர். இந்த ஒப்பந்தத்தின் விளைவாகவும், 21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏகாதிபத்திய நாடுகளின் உற்பத்தி வடிவமாகக் கருதப்பட்ட’”பழைய, இலாபங்குறைந்த, ஆபத்தான, சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தும், தொழிலாளர்கள் செறிவாகத் தேவைப்பட்ட உற்பத்தித்துறைகளையும், தண்ணீர் அதிகமாகத் தேவைப்படும் இறைச்சிக்கான மிருகங்களை உற்பத்தி செய்யும் விவசாயத் தொழிற்துறையையும் வளரும் மூன்றாம் உலக நாடுகளுக்கு மடைமாற்றும்” ஏகாதிபத்திய நாடுகளின் உத்தியால், நாடுகள் மற்றும் கண்டங்களுக்கிடையேயான வர்த்தக உறவு மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது. வர்த்தகப் பாதைகளும், சரக்குப்போக்குவரத்தும், மனிதர்களின் நகர்வும் தேச எல்லைகளைத் தாண்டி வரலாறுகாணாத அளவு வேகத்தில் முன்னும் பின்னுமாக மிகச்சிக்கலான வடிவில் நடக்கிறது. சீனாவின் ஒரு பெல்ட் ஒரு ரோடு திட்டம் இத்தகையதொரு வலைபின்னலின் நவீன வடிவமாகும். இந்த சிக்கலான அதிவிரைவு வர்த்தகத் தடங்கள், பொருட்களையும், மனிதர்களையும், விலங்குகளையும் மட்டுமன்றி இவற்றை ஓம்புயிரிகளாகக் கொண்ட நோய்க்கிருமிகளின் உலகளாவிய பரவலுக்கும் தோதான தடமாக செயல்படுகின்றன. முன்னெப்போதும் இந்நோய்கிருமிகளுக்கு இயலாததாக இருந்த இத்தகையதொரு பரவும் வீரியம் தற்போது சாத்தியமாகி உலகளாவிய கொள்ளைநோயாக மாறுவதில் உலகெங்கும் தேச எல்லைகளைத்தாண்டி குறுக்கும் நெடுக்கும் முன்னும்பின்னுமாக ஓடும் இச்சிக்கலான வர்த்தகத் தடங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
மேலே கொடுக்கப்பட்ட அட்டவணை 1980, 1990, 2017 ஆகிய ஆண்டுகளில் ஐந்து கண்டங்களிலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட உயிருள்ள இறைச்சிக் கோழிகள் மற்றும் பன்றிகளின் எண்ணிக்கையைத் தருகிறது. ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்கா கண்டங்களில் 1980, 1990 ஆகிய ஆண்டுகளை விட 2017-இல் உயிருள்ள பன்றி மற்றும் கோழிகளின் ஏற்றுமதி/இறக்குமதி எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதைக் காணலாம்.
மரபணுவியலின் முன்னேற்றத்தாலும் உற்பத்தியின் வெவ்வேறு நிலைகளுக்கேற்ப தீவனம் கொடுப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தாலும் இறைச்சிக்கான கால்நடை உற்பத்தித் தொழிற்துறையின் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது. எடுத்துக்காட்டாக இறைச்சிக் கோழி மற்றும் பன்றி வளர்ப்புத் துறையில் மரபணுவியலின் உதவியால் குஞ்சு/குட்டிகளை உருவாக்குவதல், பெருக்குதல், அக்குஞ்சு/குட்டிகளை இறைச்சிக்காக வளர்த்தல் (பெரும்பாலும் ஒப்பந்தத் விவசாயிகளால் வளர்க்கப்படுகிறது) ஆகிய பல கட்டங்களில் நடைபெறுகிறது. இவ்வுற்பத்தியின் ஒவ்வொரு கட்டமும் வெவ்வேறு இடங்களில் அல்லது நாடுகளில் நடப்பதால் உயிருள்ள விலங்குகள் அவ்விடங்களுக்கு கொண்டுசெல்ல வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக 2005-இல் மட்டும் 2.5 கோடிகளுக்கும் மேற்பட்ட உயிருள்ள பன்றிகள் சர்வதேசரீதியில் வர்த்தகம் செய்யப்பட்டன. அமெரிக்காவில் இது போன்ற உயிருள்ள பண்ணை விலங்குகளின் வர்த்தகம் அதிகமாக நடைபெறுகிறது. 2001-இல் மட்டும் 27% பண்ணைப் பன்றிகள் அமெரிக்காவின் ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணத்திற்கு அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மாகாணத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன. 2005-இல் இங்கிலாந்தில் ஏற்பட்ட பறவைக்காய்ச்சல் பற்றிய விசாரணையில் உற்பத்தியின் வெவ்வேறு கட்டங்களை நிறைவேற்றுவதற்காக இறைச்சிக் கோழிகள் இங்கிலாந்திற்கும் ஹங்கேரிக்கும் நான்கு முறை கொண்டுசெல்லப்பட்டது தெரிய வந்தது.
சீனா 2018-இல் ஏற்பட்ட ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சலால், பன்றி உற்பத்தியில் பின்னடைந்தது. (ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் வீரியமிக்க தொற்றுத்தன்மை வாய்ந்தது. பதப்படுத்தப்பட்ட இறைச்சியிலும் கூட உயிர்வாழும் சக்திவாய்ந்தவை.) எனவே சீனா பன்றி இறைச்சியை இறக்குமதி செய்ய ஆரம்பித்தது. 2018 மே மாதம் மட்டும் பன்றி இறக்குமதி 63% அதிகரித்தது 1,87,000 டன்னாகியது. ஏற்கனவே சீன-அமெரிக்க வர்த்தகப் போரால் அமெரிக்க பன்றிகளுக்கான இறக்குமதி வரியை 62% ஆக ஆக்கிய நிலையில் தன் உள்நாட்டுத் தேவைகளுக்காக பிரேசிலையும் ஐரோப்பாவையும் மட்டுமே சார்ந்திருக்கும் நிலைக்குத் சீனா தள்ளப்பட்டது. கனடா நாட்டிலிருந்து பன்றி இறைச்சி இறக்குமதிக்கு தடை விதித்திருந்தது. சீனாவின் உள்நாட்டுத் பன்றி இறைச்சித் தேவை 24 மில்லியன் டன் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் அதை ஈடுகட்ட அமெரிக்க பன்றி இறைச்சிக்கான இறக்குமதி வரியைக் குறைக்கும் நிலைக்கு சீனா தள்ளப்பட்டது12. கனடாவுடனான இறக்குமதித் தடையையும் நீக்கியது. உலகளாவிய கால்நடை தொழிற்துறை வர்த்தகத் தடங்கள் எவ்வளவு சிக்கலான முறையில் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
ஆசியாவை அடிப்படையாக கொண்ட ச்ரோயன் போக்பெந்த் (Chaoren Pokphand, CP), உலகிலேயே நான்காவது பெரிய இறைச்சிக்கோழி உற்பத்தி நிறுவனமாகும். இதன் இறைச்சிக்கோழி தொழிற்சாலைகள் துருக்கி, சீன, மலேசியா, இந்தோனேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வைத்துள்ளது. இதன் வணிக வலைப்பின்னல் இந்தியா, சீனா, இந்தோனேசியா வியத்னாம் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியது. தென்கிழக்கு ஆசியாவில் துரித உணவக வலைப்பின்னலையும் சொந்தமாக கொண்டுள்ளது.
2003ல், சீனாவில் உள்ள CP குழுமத்தின் இறைச்சிக்கோழி பண்ணையில் பறவைக் காயச்சல் தாக்கிய உடன் ஜப்பான் சீனாவில் இருந்து இறைச்சிக்கோழி இறக்குமதியை தடைச் செய்தது. உடனே, தாய்லாந்தில் உள்ள CP குழுமம் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்து சந்தை இடைவெளியை பூர்த்தி செய்தது. வெவ்வேறு நாடுகளில் இப்படிப்பட்ட வழங்கல் சங்கிலியை கொண்டிருப்பது வைரஸ் பரவலுக்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. மேலும், இது போன்ற நிறூவனங்கள் உலகளாவிய உற்பத்தி மற்றும் வழங்கல் சங்கிலியை கொண்டிருப்பதால் அதன் எல்லா வணிக வலைப்பின்னலுக்கும் வைரஸ் பரவுவதற்கு ஏற்ற நிலைமைகளை உண்டாக்கிவிடுகிறது.
ஏனென்றால், இவ்வர்த்தகத் தடங்கள் வழி வைரஸ் செல்லுமிடமெல்லாம் பூகோளரீதியான மறுசீரமைப்புக்கு (geographical reassortment of antigen) உள்ளாகி் ஒவ்வொரு நாட்டின் சுற்றுச்சூழலுக்கேற்ப தனது பண்புகளான நிறம், வடிவம், அளவு, நடத்தை, உயிர்வேதியியல் பண்புகள் ஆகியவற்றில் ஏற்படும் பீனோடைப் (phenotype) மாற்றத்தை அடைகின்றன. எடுத்துக்காட்டாக 2003-இல் ஹாங்காங்கில் தோன்றிய H5N1 முதலில் பறவையிலிருந்து மட்டுமே மனிதனுக்குப் பரவியது. ஆனால் மனித-மனிதத் தொற்று ஏற்படுத்துவதற்கு ஏற்ற வீரியத்தைப் பெற்ற H5N1 வைரஸ் ஹாங்காங், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா, எகிபது, சீனா, துருக்கி, ஈராக், இந்தியா, பாகிஸ்தான் எனப் பல இடங்களுக்கு பயணித்ததன் மூலமே சாத்தியமானது.
இந்நாடுகெளெல்லாம் புதிய தாராள வர்த்தகக் கொள்கைகளையும், பன்னாட்டு நிதிமூலதனத்தின் ஏற்றத்தாழ்வான ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொண்டு, தங்கள் நாடுகளின் தொழிற்துறையையும் விவசாயத்துறையையும் ஏகாதிபத்தியங்களும், தனியார் முதலாளிகளும் தங்கு தடையற்ற வர்த்தகத்தை செய்யும் விதமாக மறுகட்டமைப்புகளை நடைமுறைப்படுத்தியவை. இக்காரணத்தால் ஏழை நாடுகளின் பல கிராமப்புற நிலப்பரப்புகள் ஒழுங்குமுறைபடுத்தப்படாத புறநகர் வேளாண்வணிகச் சேரிகளாக மாற்றப்பட்டுள்ளன. பல கண்டங்களில் பரவுவதால் இத்தகு சூழல்களிலிருந்து மரபணு மாறுபாட்டைப் பெறும் வைரஸ்கள் மனிதனை ஓம்புயிரியாக்கத் தேவையான குறிப்பிட்ட பண்புகளை அடைந்து கொள்ளை நோயாக மாறுகிறது; இதே உலகளாவிய வணிக வலைப்பின்னலில் வேகமாக பரவவும் செய்கிறது.
நவீன கால்நடைத்-தொழிற்துறை கூட்டுகளால் (livestock-industrial complex) மட்டும் கொள்ளைநோய்கள் உருவாவதில்லை. அதாவது தொழிற்சாலைப் பண்ணைகள் மட்டுமே இத்தகைய புது வைரஸ்களை உற்பத்தி செய்வதாக எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளக்கூடாது, இதோடு கூடவே பரந்துபட்ட அளவில் காடுகள் அழிக்கப்படுவது, சுற்றுச்சூழல் சீர்குலைக்கப்படுவது, விரிவாக்கப்பட்ட பண்ட உற்பத்தி, உலகளாவிய மதிப்புச் சங்கிலி போன்றவையும் காரணிகளாக உள்ளன. இதன் விளைவாக வனவிலங்குகளுக்கும் வீட்டுவிலங்குகளுக்கும் பண்ணை விலங்குகளுக்குமிடையிலான இடைவெளி அழிக்கப்படுவது, பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்களையும் விலங்குகளையும் ஒரே உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் பிணைத்தது ஆகியவற்றின் மூலம் புதிய நோய்க்கிருமிகளின் சுழற்சிக்கு வழிவகுத்துள்ளது. இதற்குக் காரணம் மூலதனத்தின் உள்ளியல்பே ஆகும். முன்னர் காட்டுயிர்களில் தனிமைப்படுத்தப்பட்டதாக அல்லது மனிதர்களுக்கு பாதிப்பில்லாததாக இருந்து வந்த வைரஸ் வகையினங்கள் கொள்ளைத் தொற்றுநோய்க்கான பண்புகளை அடைய சாதகமான உயர்போட்டிச் சூழல்களை (hypercompetitive environment) மூலதனத்தின் இவ்வுள்ளியல்பு உருவாக்கியுள்ளது. கொள்ளைத் தொற்றுநோய்க்கான இப்பண்புகளாவன: விரைவான வைரஸ் வாழ்க்கைச் சுழற்சிகள், சூனாடிக் தாவு திறன் மற்றும் புதிய பரிமாற்ற திசையன்களை (transmission vectors) விரைவாக உருவாக்கும் திறன் போன்றவையாகும்.13
தெற்காசியாவில் 1990-களின் இறுதியில் நிப்பா வைரஸ் உருவானது. இங்கு பன்றிப்பண்ணைகள் அபரிமிதமான வளர்ச்சிகண்ட காலமிது. பண்ணைகளுக்குகாக காடுகள் அழிக்கப்பட்டது மற்றும் வறட்சி போன்ற காரணங்களால் வாழ்விடங்களை இழந்த வௌவால்களாலிருந்து (வௌவால் எச்சத்திலிருந்து) இப்பன்றிகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. 2013-இல் மேற்காப்பிரிக்காவில் பரவிய கொள்ளைநோயான எபோலா, சமகாலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஓர் எடுத்துக்காட்டாகும், நோய்த்தொற்று ஏற்பட்ட 90% மக்களை இவ்வைரஸ் கொன்றது. இந்த வைரஸும் வௌவால்களால் காடுகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அமெரிக்க, ஐரோப்பிய, சீன ஏகபோகங்களால் கினியப் புல்வெளி கையகப்படுத்தப்பட்டு எண்ணெய்ப்பனை விவசாயம் தொடங்கப்பட்டபோது இவ்வௌவால்கள் தங்கள் உணவிற்காக வாழிடத்தை எண்ணெய்ப்பனைப் பண்ணைகளுக்கு மாற்றிக் கொண்டதால் இவ்வைரஸ் வௌவால்களிலிருந்து மனிதருக்கு தொற்றும் சூழல் உருவானது.
கடந்த சில பத்தாண்டுகளாக கார்ப்பரேட் விவசாயத்தின் கட்டுப்பாடற்ற விரிவாக்கத்தால் இந்த போக்குகள் மேலும் அதிகரித்துள்ளன. தொழிற்துறை வேளாண் உற்பத்தியின் விரிவாக்கத்தோடு கூடவே உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கத்தால் உலகெங்கிலும் உள்ள கன்னிவனப்பகுதியையும் சிறுஉடைமை விவசாய நிலங்களையும் மூலதனம் நிலப்பறி செய்கிறது. இம்முதலீடுகள் தான் நோய் வெளிப்படுவதற்கு வழிவகுக்கும் காடழிப்பு மற்றும் முதலாளித்துவ வளர்ச்சிக்கான உந்து சக்தியாக இருக்கின்றன. மூலதனத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் இப்பெரு நிலப்பரப்புகள் ஏற்படுத்தியிருக்கும் செயற்பாட்டு பன்முகத்தன்மையும் கடுஞ்சிக்கல் நிலையும் (functional diversity and complexity)14 தான், முன்பு பெட்டிக்குள் (காட்டுயிர்களில்) அடைக்கப்பட்டிருந்த நோய்க்கிருமிகள் உள்ளூர் கால்நடைகள் மற்றும் மனித சமூகங்களுக்குள் பரவ ஏதுவாகியுள்ளன. முதலாளித்துவ அமைப்பின் இதயத்திலிருந்து ஓடும் மூலதனத்தால் இந்நிகழ்ச்சிப்போக்கு நடக்கிறது. இதனாலேயே மூலதனத்தின் மையங்களாகத் திகழும் இலண்டன், நியூயார்க், ஹாங்காங் போன்றவற்றை நமது கொள்ளைநோய்களின் ஊற்றுக்கண்களாகக் கருதவேண்டும் என்கிறார் வாலஸ். நில பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்களைப் போலவே, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பரந்துபட்ட சுற்றுச்சூழல் சீர்குலைவும் மேலும் சூனாசிஸ் ஏற்பட ஏதுவாகும்.
கொள்ளைநோய்களுக்கான காரணம் முதலாளித்துவமே
இதுவரை நவீன பெருவீத கால்நடை மற்றும் இறைச்சிக்கோழி வளர்ப்புதுறையினால் எப்படி மனிதர்களை தொற்றும் புதுப்புது வைரஸ்கள் உருவாகின்றன, பரிணாமமடைகின்றன என்பதையும் நவீன கார்ப்பரேட் விவசாயத்தினால் எங்ஙனம் புதிய தொற்று வைரஸ்கள் உருவாகின்றன என்பதையும் பார்த்தோம். மேலும், அவை உலகளாவிய கொள்ளை நோயாக உருவாக இந்த உலகளாவிய முதலாளித்துவ உற்பத்திமுறையே (உற்பத்தி, வாணிபம் வலைப்பின்னல், வினியோகம்) எங்ஙனம் வாய்ப்பேற்படுத்தி கொடுக்கின்றன என்பதையும் கவனித்தோம். ஆனால், எந்த தொற்றுகிருமிகளும் அவை தொற்ற ஏதுவான சமூகத்தை எதிர்கொள்ளாமல் கொள்ளைநோயாக உருவெடுப்பதில்லை. அப்படிப்பட்ட சமூகத்தை, ஊட்டசத்தற்ற, உடல்ரீதியிலும் மனரீதியிலும் பலவீனமான, பொதுச் சுகாதாரமற்ற, சமூக பாதுகாப்பற்ற மக்கள் சமூகத்தை முதலாளித்துவம் எப்படி படைக்கின்றது என்பதை அதன் மூலம் கொள்ளைநோய்களுக்கு காரணமாகின்றது என்பதையும் இனி பார்ப்போம்.
ஆரம்பகால முதலாளித்துவத்தில் மக்களின் உடல்நிலை எவ்வாறு நலிவுறுகிறது, அதற்கு முதலாளித்துவத்தின் உற்பத்திமுறையே எப்படி காரணமாக இருக்கிறது என்பதை ஏங்கெல்ஸ் தனது இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கத்தின் நிலை என்ற புத்தகத்தில் விளக்குகிறார்.
"... ஆனால் சமூகமானது பல நூற்றுக்கணக்கான பாட்டாளிகளை இத்தகைய நிலையில் இருத்திவைக்கும்போது, அவர்கள் தவிர்க்கவியலாமல் மிகவும் இளமையிலும், இயற்கைக்கு மாறான முறையிலும் மரணங்களைச் சந்திக்க நேரிடுகிறது. இது, வன்முறையால் ஒரு துப்பாக்கிக் குண்டுக்கு அல்லது வாள் வெட்டுக்குப் பலியாவதைப் போன்ற மரணமாகும். இது, ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கைத் தேவைகளைப் பறித்துக் கொள்ளும்போது, அவர்களை வாழவே முடியாத நிலைகளின் கீழ் இருத்தி வைக்கும்போது - சட்டத்தின் இரும்புக் கரம் கொண்டு அவர்களைக் கட்டாயப்படுத்தும்போது, மரணங்கள் தவிர்க்கவியலாத விளைவு என்று உறுதியாகும் வரை அவர்களை இத்தகைய நிலைமையிலேயே தொடர்ந்து இருக்குமாறு வைத்திருக்கும்போது - இத்தகைய நிலைமைகளால் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டவர்கள் அழிந்தே போக வேண்டும். இருப்பினும், இத்தகைய நிலைமைகள் தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கப்படுகின்றன. இத்தகைய செயலானது, நிச்சயமாகவே, ஒரு தனிநபரின் செயலைப் போன்றதொரு அப்பட்டமான கொலையே ஆகும். இது, பொய்வேடமிட்ட, தீங்கிழைக்கும் கொலை; இந்தக் கொலைக்கு எதிராக யாரும் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் முடியாது. அது என்னவென்றே தெரியவில்லை. ஏனென்றால், எந்தவொரு மனிதனும் கொலைகாரனைப் பார்க்க முடிவதில்லை. (ஏனென்றால், ஒவ்வொருவரும் இந்தக் கொலைக்குப் பொறுப்பாகிறார்கள்; இருப்பினும் யாரும் இதற்குப் பொறுப்பாளியுமல்ல)... இது சமூகப் படுகொலையைப் பண்படையாளப்படுத்துகிறது... "15
“பெரிய நகரங்களில் மக்கள் தொகையைக் குவித்து மையப்படுத்துவதானது, ஒரு சாதகமற்ற சூழலைச் செயல்படுத்துகிறது. இங்கிலாந்து நாட்டில் நிலவும் காற்றைப் போல, லண்டன் நகரின் வளி மண்டலம் ஒருக்காலும் தூய்மையாகவும், ஆக்சிஜன் நிறைந்ததாகவும் இருக்க முடியாது. மூன்று முதல் நான்கு சதுர மைல் பரப்பளவில், நெருக்கமாக உயிர்வாழும் 25 லட்சம் ஜோடி நுரையீரல்களும், 2,50,000 எரிவிசை எந்திரங்களும் (ஆலைகளிலுள்ள டீசல் என்ஜின்கள், நிலக்கரி அடுப்புகள் மற்றும் மோட்டார் வாகனங்கள்) ஏராளமான ஆக்சிஜனை உட்கிரகிக்கின்றன. இதனால் ஆக்சிஜன் சிரமத்துடன்தான் மாற்றீடு செய்யப்படுகிறது. ஏனென்றால், நகரங்களைக் கட்டியமைக்கும் முறையானது, காற்றோட்டத்திற்கு இடையூறாக இருக்கிறது. சுவாசத்தாலும், ஆலைகளின் எரிவிசை எந்திரங்களாலும் கார்போனிக் அமில வாயு விளைவிக்கப்படுகிறது. அதன் தனிச் சிறப்பான ஈர்ப்பு விசையால் இந்த வாயு தெருக்களில் தங்கி விடுகிறது. பிரதான காற்றின் ஓட்டமானது நகரத்துக் கட்டிடங்களின் கூரைகளுக்கு மேலாகச் செல்கிறது. இதனால், நகரங்களில் வாழ்வோரின் நுரையீரலானது, போதிய அளவுக்கு ஆக்சிஜனைப் பெறத் தவறி விடுகிறது. இதன் விளைவாக, குறைந்த உயிர்ச்சக்தியும், மன ரீதியாக - உடல் ரீதியாகக் களைப்பும் ஏற்படுகிறது. இந்தக் காரணத்தினால் சுதந்திரமான, இயல்பான சூழலில் வாழும் கிராமப்புற மக்கள்தொகையை விட, நகரங்களில் வாழ்வோர் மிகக் கடுமையான நோய்க்கும், குறிப்பாக அழற்சி நோய்க்கும் ஆளாகின்றனர். இருப்பினும், கிராமப்புற மக்கள் நாள்பட்ட நோயினால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். பெருநகரங்களில் வாழ்க்கையானது, தன்னுள்ளேயே, உடல் நலத்திற்குக் கேடு விளைப்பதைக் கொண்டிருக்கிறது என்றால், தொழிலாளி வர்க்கத்தினரின் குடியிருப்புகளில் நிலவும் தீங்கு விளைவிக்கும் அசாதாரணமான சுற்றுச்சூழலின் தாக்கமானது, இன்னும் எவ்வளவு பெரியதாக இருக்கும்? அங்கே, நாம் ஏற்கெனவே பார்த்ததைப் போல அனைத்துமே இணைந்து காற்றை நஞ்சாக்கிக் கொண்டிருக்கின்றன.”16.
இதன் பிறகு டைபஸ், காலரா போன்ற கொள்ளைநோய்கள் உருவாக கூடிய இடங்களாக தொழிலாளர்களின் குடியிருப்புகள் எப்படி உள்ளன; எங்ஙனம் தொழிலாளர்கள் அவற்றுக்கு பலியாகின்றனர் என்பதை விளக்கிச் செல்கிறார். ஏங்கெல்ஸின் கூற்று இன்றைக்கு அப்படியே பொருந்தாவிட்டாலும் (பின் தங்கிய ஏழை நாடுகளுக்கு பொருந்தும்), முதலாளித்துவ சமூகத்தில் தொழிலாளர்களின் நிலைமை குறிப்பாக வாழ்நிலைமை எங்ஙனம் அவர்களை பலவித நோய்களுக்கும், கொள்ளை நோய்களுக்கும் பலியாபவர்களாக ஆக்குகிறது என்பதை இன்றும் பொருத்தி புரிந்துகொள்ள முடியும்.
குறிப்பாக, கோவிட்-19 போன்ற கொள்ளை நோயால் உடல்ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அதிகம் பாதிக்கப்படுவது சாதாரண உழைக்கும் மக்கள்தான். அவர்கள் மீது முதலாளித்துவ வர்க்கம் நிகழ்த்தும் நேரடியான மற்றும் சமூகரீதியான கட்டுபாடற்ற சுரண்டல்கள் அவர்களை உடல்ரீதியில் பலவீனமானவர்களாக்குகிறது.
குறிப்பாக, கோவிட்-19 போன்ற கொள்ளை நோயால் உடல்ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அதிகம் பாதிக்கப்படுவது சாதாரண உழைக்கும் மக்கள்தான். அவர்கள் மீது முதலாளித்துவ வர்க்கம் நிகழ்த்தும் நேரடியான மற்றும் சமூகரீதியான கட்டுபாடற்ற சுரண்டல்கள் அவர்களை உடல்ரீதியில் பலவீனமானவர்களாக்குகிறது.
கொள்ளைநோய் இயலாளர்கள் (Epidemologist) இந்நோய்களை பற்றி பேசும்போது “அடிப்படை மறுவுற்பத்தி எண்” (basic reproduction number, Ro) பற்றி குறிப்பிடுகின்றனர். யாருக்கும் நோயெதிர்ப்பு சக்தி இல்லை (நோயெதிர்ப்பு சக்தி எண் பூஜியம்) என்று கருதிக் கொண்டு எவ்வளவு மக்கள் ஒரு கொள்ளை நோயால் பாதிக்கப்படுவர் என்பதை குறிக்கும் எண் தான் Ro. இந்த எண் ஒன்றுக்கும் குறைவாக இருந்தால் அந்நோயின் பரவல் சிறிது காலத்தில் நின்றுவிடும். Ro ஒன்றுக்கும் மேல் இருந்தால் அது மேலும் பரவ அதிக வாய்ப்பிருக்கிறது. கோவிட்-19 வைரஸுக்கு Ro எண் 2.0 முதல் 2.5 வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அல்லது, ஒரு வைரஸ் எவ்வளவுதான் வீரியமிக்கதாக இருந்தாலும் ஒரு சமூகத்தின் நோயெதிர்ப்பு சக்தி எண் அதிகமாக இருந்தால் அவ்வளவுக்கு கொள்ளைநோயின் பரவல் குறைவாக இருக்கும்.
ஆக, நடைமுறையில் (நோயெதிர்ப்பையும் சேர்த்துக் கணக்கிடும்போது) இந்த Ro எண் ஒன்றுக்கு கீழ் இருக்குமா என்பது தொற்றும் வைரஸை பொருதத்து மட்டுமல்ல, அக்கொள்ளைநோயை எதிர்கொள்ளும் சமூகத்தின் ஆரோகியத்தையும் பொருத்ததாகும். ஒரு சமூகம் அனைத்து வகையிலும் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது மக்களின் நிலையான வாழ்வாதாரம், சமூக பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு, பொது மருத்துவம் மற்றும் சுகாதாரம், மக்களின் ஊட்டச்சத்து நிலை இன்னும் பலவற்றைச் சார்ந்தது. ஆனால், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் கடந்த 30 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் புதியதாராளவாதக் கொள்கைகள் என்பது மேலே கூறிய அனைத்திற்கும் எதிராக வேலைச் செய்கிறது.
மேலும், 2008ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து இன்னும் முழுமையாக மீள முடியாத முதலாளித்துவம் மக்கள் மீது சிக்கன நடவடிக்கைகளை ஏவியுள்ளது. வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகளில் கூட ஓய்வூதிய வெட்டு, சம்பளக் குறைப்பு, வேலைவாய்ப்பின்மை, சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதிகளை குறைப்பது போன்றவற்றை அமல்படுத்தியதன் விளைவாக அந்த சமூகத்தின் ஆரோக்கியம் வெகுவாக வீழ்த்தப்பட்டது. அதன்மூலம் அச்சமூகங்களில் இக்கொள்ளை நோய் பரவுவதற்கான தளத்தை முதலாளித்துவம்தான் ஏற்படுத்தியுள்ளது.
உதாரணமாக, இத்தாலியை எடுத்துக்கொள்வோம். இத்தாலி நாட்டில் தேசிய மருத்துவ சேவை அமலில் இருந்து வந்தது; அதன்படி எல்லா இத்தாலிய குடிமக்களும், அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டினரும் தங்களுக்கான மருத்துவ சேவையை இலவசமாக பெற்று வந்தனர். 2000ம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனம் இத்தாலிய மருத்துவத் துறையை உலகிலேயே இரண்டாவது சிறந்த மருத்துவ சேவை (முதலாவது பிரான்ஸ்) என்று பாராட்டியது. ஆனால், 2012-ம் ஆண்டில் அரசுக்கு ஏற்பட்ட கடன் நெருக்கடியின் காரணமாக சிக்கன நடவடிக்கையை அறிவித்தது; அதன்படி 2012-ல் இத்தாலிய அரசு மருத்துவத்திற்கான தனது நிதி ஒதுக்கீட்டை 90 கோடி யூரோ குறைத்தது, 2013-ல் மேலும் 180 கோடி யூரோ குறைத்தது, 2014-ல் மேலும் 200 கோடி யூரோ குறைத்தது. தனது குடிமக்களின் மருத்துவத்திற்கான நிதியை தொடர்ச்சியாக குறைத்துக்கொண்டு வந்துள்ளது. இதனால், 2015-ல் 1.22 கோடி இத்தாலியர்கள், அதாவது ஐந்தில் ஒரு பங்கு இத்தாலியர்கள், மருத்துவ வசதி அற்றவர்களாக்கப்பட்டனர்; மேலும் 78 லட்சம் இத்தாலியர்கள் தங்களது மொத்த சேமிப்பையும் மருத்துவத்திற்காக செலவிட வேண்டிய நிலையில் அல்லது கடன் வாங்க வேண்டிய நிலையில் அல்லது இரண்டையும் செய்யக் கூடிய நிலையில் உள்ளனர்17.
இவையல்லாமல் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட வேலையிழப்பு, சம்பள வெட்டு, வேலையின்மை, கடன் நெருக்கடி போன்றவற்றையும் நினைத்து பார்த்தால் அம்மக்களின் ஊட்டச்சத்து, ஆரோக்கியம் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை புரிந்துகொள்ளலாம். இந்நிலைமைகள் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டால், இத்தாலியில் கோவிட்-19 ஏன் அவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளிலும் இதே நிலைதான். முதல் 20 சதவீத பணக்காரர்களின் வருமானம் மற்றும் கடைசி 20 சதவீத மக்களின் வருமானம் ஆகியவற்றுக்கு இடையிலான விகிதம் இத்தாலியில் 2007-ல் 5.5 ஆக இருந்தது 2016-ல் 6.5 ஆக உயர்ந்துள்ளது; ஸ்பெயினில் 2007-ல் 5.4 ஆக இருந்தது 2016-ல் 6.6 ஆக உயர்ந்துள்ளது; இதுவே கிரீஸில் 2007-ல் 5.3 ஆகவும் 2016-ல் 6.2 ஆகவும் உள்ளது. மேலும் இந்நாடுகளின் சிக்கன நடவடிக்கைகள் எவ்வாறு ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்திருக்கிறது என்பதை ஆக்ஸ்பாம் அறிக்கை (2018) விளக்குகிறது.
ஸ்பெயின் நாட்டின் மொ.உ.உ (2013-ல் இருந்து) பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு அதிகரித்த போதிலும் 1.3 கோடி அல்லது 28 சதவீத ஸ்பெயின் குடிமக்கள் வறுமையிலும் சமூக விலக்குக்கு ஆட்பட்ட நிலையிலும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன18. ஸ்பெயினின் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் வறுமையில் உள்ளனர். மேலும் ஸ்பெயினின் பல ஆயிரக் கணக்கான மக்கள் வீடற்றவர்களாக உள்ளனர்; வீட்டுக்கான வாடகை இரண்டு மடங்கு அதிகரித்து செலவழிக்க கூடிய வருமானத்தை விட 40 சதவீதம் அதிகரித்துள்ளது. 2008 நெருக்கடிக்கு பின், பல ஐரோப்பிய நாடுகளின் நிலைமை இதுதான். அமெரிக்காவிலும் மக்களுக்கான மருத்துவ ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளன; அங்கு கோவிட்-19னால் இறந்தவர்களில் பெரும்பான்மையோர் கருப்பினத்தவர்கள் தான் என்று பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தியா போன்ற பின் தங்கிய நாடுகளிலோ (வளர்ந்த நாடுகளில் இருப்பது போல) சமூக பாதுகாப்போ, வேலை பாதுகாப்போ இல்லை. இந்தியாவின் குழந்தைகளில் 40 முதல் 50 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டில் உள்ளனர். மொத்த வேலைவாய்ப்பில் கிட்டதட்ட 80 சதவீதம் வேலைகளை முறைபடுத்தபடாத துறைகள் வழங்குவதால், அத்தொழிலாளர்கள் எவ்வித பாதுகாப்பும் அற்றவர்களாக உள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட உடனே வெளிப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போராட்டங்களையும் நெடும் பயணங்களையும் பற்றிய செய்திகளை பார்த்தாலே போதும், இது போன்ற கொள்ளைநோய்களால் நம் மக்கள் கொல்லப்படுவதற்கு ஏதுவாகத்தான் நம் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அமைப்பு உள்ளதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
மேலும், முதலாளித்துவ உற்பத்திமுறை சுற்றுச்சூழலை மாசுபடுத்தி மக்களை நாட்பட்ட நோய்களுக்கு தள்ளிவிடுவதால், கொள்ளைநோய்களில் இறப்பது சுலபமாகிவிடுகிறது. கோவிட்-19-னால் இறப்பவர்கள் ஏற்கெனவே உடல்நல பிரச்சினை உள்ளவர்களும் அதனால் இயல்பாகவே வயதானவர்களும்தான் என்று செய்திகளில் கூறப்படுகிறது. ஆனால், அந்த உடல்நல குறைபாடு ஏன் மக்களுக்கு ஏற்படுகிறது என்பதைதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். “நகரங்களில் வாழ்கின்ற மக்கள்... நாள்பட்ட கொடிய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்” என்று கூறுகிறார் எங்கெல்ஸ்.
2003-ல் வெடித்த சார்ஸ் நோயின் இறப்பு விகிதம் (mortality) மற்றும் நீண்டகால பாதிப்பிற்கும் (morbidity) காற்று மாசு குறியீட்டிற்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வுகள் வந்துள்ளன. காற்றுமாசு அதிகரிக்க அதிகரிக்க சார்ஸினால் ஏற்பட்ட இறப்பு விகிதமும் அதிகரித்தது. குறைந்த காற்றுமாசு குறியீடு உள்ள இடத்தில் உள்ள சார்ஸ் இறப்பு விகிதத்தை விட மத்தியதர காற்றுமாசு உள்ள இடத்தில் சார்ஸ் இறப்பு விகிதம் 84 சதவீதம் அதிகமாக இருந்தது. இதுவே அதிக காற்றுமாசு குறியீடு உள்ள இடத்தில் 200 சதவீதம் அதிகமாக சார்ஸ் இறப்பு விகிதம் இருந்தது19.
தற்போதை கோவிட்-19 கொள்ளை நோய்க்கு வட இத்தாலிய பகுதி ஏன் அதிகமாக ஆளாகியுள்ளது என்பதை இன்னொரு ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது, காற்றுமாசு அதிகரிக்க அதிகரிக்க நாள்பட்ட நோய்கள் அதிகமாவதும் அதனால் அதிக அளவில் கோவிட்-19 தொற்று ஏற்படுத்தியிருப்பதையும் எடொர்டோ-வும் அவரது குழுவும் எடுத்துக்காட்டுகிறது20. அமெரிக்காவை சேர்ந்த இன்னொரு அறிவியலாள்ர்கள் குழு21, ஏற்கனவே காற்றுமாசினால் ஏற்பட்டுள்ள நோய்வாய்ப்பட்ட தன்மை கோவிட்-19ன் இறப்பு விகிதத்தை அதிகப்படுத்துவதாக கூறுகிறது. ஒரு கனமீட்டரில் ஒரு மைக்ரோ கிராம் (1 µg/m3) அளவிற்கு காற்றுமாசு அதிகரித்தால் கோவிட்-19ன் இறப்பு விகிதம் 15 சதவீதம் அதிகரிப்பதாக கணக்கிட்டுள்ளது.
ஆக, முதலாளித்துவ சமூக அமைப்பு மக்கள் மீது அனைத்து வழிகளிலும் தாக்குதல் தொடுத்துள்ளதன் ஒரு வெளிப்பாடே இக்கொள்ளைநோய் தாக்குதல். முதலாளித்துவத்தில் மக்களின் மேற்கூறிய நிலைமைகள் தான் தற்போதைய கொள்ளைநோயான கோவிட்-19ன் இறப்பு விகிதத்திற்கு காரணம் என்பதை இப்படித்தான் நாம் விளக்க முடியும். இது ஏங்கெல்ஸ் கூறியது போல, முதலாளித்துவத்தால் நடத்தப்படும் சமூக கொலை. கரோனாவைரஸ் மக்களை காவு வாங்குதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தது முதலாளித்துவ சமூக அமைப்பும் முதலாளிகளின் இலாபத்திற்கான வெறியுமேயாகும். எனவே, இந்த முதலாளித்துவ சமூக அமைப்பை தூக்கியெறிவதில் இருந்துதான் கொள்ளை நோய்க்கான நமது எதிர்வினையைத் தொடங்க வேண்டும்.
ஆதாரங்கள்
- Morens, David M, Peter Dazak and Jeffery K Taubenberger, 2020, “Escaping Pandora’s Box-Another Novel Coronavirus”, New England Medical Journal (26 Feburary).
- Dehner, George, 2012, Global Flu and You: A History of Influenza
- ibid
-
McNeill, William H, 1976, Plagues and People
-
McNeill, William H, 1976, Plagues and People.
- Engels, Friedrich, 1975 [1845], The Condition of the Working Class in England, in Karl Marx and Frederick Engels, Collected Works, volume 4.
- மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் பன்னிரண்டு பகுதிகளில், தொகுதி 8, பக். 62-64; அழுத்தம் நம்முடையது.
- Global TB Report, WHO, 2019. 2018ல் மட்டும் 4,49,000 பேர் காசநோயால் இந்தியாவில் இறந்துள்ளனர்.
-
Wallace, Rob, 2016, Big Farms Make Big Flu (Monthly Review Press).
- ஆய்வகங்களில் நுண்ணுயிரிகளை வளர்க்க பயன்படுத்தப்படும் கண்ணாடிக் கிண்ணம்
- Davis, Mike, 2006b, The Monster at Our Door: The Global Threat of Avian Flu (Owl Books).
- https://www.theguardian.com/business/2019/nov/23/china-pigs-african-swine-fever-pork-shortage-inflation.
-
Chuang, 2020, “Social Contagion: Microbiological Class War in China” (February), http://chuangcn.org/2020/02/social-contagion/
-
செயல்பாட்டு பன்முகத்தன்மை (functional diversity) என்பது பல்லுயிர் பெருக்கத்தின் (biodiversity) ஒரு அங்கமாகும். இது பொதுவாக சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் உயிரினங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தின் வரம்பைப் பற்றியது. Complexity பெரும்பாலும் நோய்த்தொற்று ஏற்பட்ட உயிரி மற்றும் நோய்க்கிருமிகளின் இணை பரிணாம வளர்ச்சியில் எழுகிறது. நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் நோய்க்கிருமிகள் அதைத் தவிர்ப்பதற்கு உருவாக்கிய பல நுட்பங்கள் போன்ற அதிநவீன தழுவல்கள் காரணமாக இக்கடுஞ்சிக்கல் நிலை உருவாகுகின்றது.
-
இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை, எங்கெல்ஸ், மார்க்ஸ் - எங்கெல்ஸ் தொகுப்பு நூல்கள், ஆங்கிலம், தொகுதி-4, பக். 393-4
-
இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை, எங்கெல்ஸ், மார்க்ஸ் - எங்கெல்ஸ் தொகுப்பு நூல்கள், ஆங்கிலம், தொகுதி-4, பக். 394-5
-
Rossella De Falco, Death by a million cuts: what future for the right to health in Italy? August 22, 2018
-
Eurostat, 2017. Statistics on Income and Living Conditions (t_ilc)
- Yan Cui, Zuo-Feng Zhang, Air pollution and case fatality of SARS in the People's Republic of China: an ecologic study, 2003.
- Edoardo Conticini, Bruno Frediani, Dario Caro, Can atmospheric pollution be considered a co-factor in extremely high level of SARS-CoV-2 lethality in Northern Italy?, March, 2020.
- Xiao Wu MS, Rachel C. Exposure to air pollution and COVID-19 mortality in the United States, updated on April 5, 2020.
✲ ★ ✲
No comments:
Post a Comment